கோலாலம்பூர்: மலேசியாவில் தேசிய அளவில் நான்கு மாநிலங்களில் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் ஐஎஸ் இயக்கத் தோடு தொடர்பு உடையவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட 9 பேரை கைது செய்திருப்பதாக போலிசார் கூறினர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் மொவிடா குண்டு வெடிப்புத் தாக்குதலில் சம்பந்தப் பட்டவர்களாவர். கடந்த ஜூலை 20 மற்றும் ஆகஸ்டு 9-ஆம் தேதிகளில், புக்கிட் அமான் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினர் கோலாலம்பூரிலும் ஜோகூர், சாபா மற்றும் கிளந்தான் மாநிலங்களிலும் மேற்கொண்ட அதிரடிச் சோதனையின்போது இந்த 9 பேரும் கைது செய்யப் பட்டதாக போலிஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர் கூறினார். கைது செய்யப்பட்டவர் களில் மூன்று பேர் வெளிநாட்ட வர்கள் என்றும் அவர்கள் 17 வயதுக்கும் 56 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் காலிட் தெரிவித்தார்.
பூச்சோங்கில் இரவு கேளிக்கை விடுதியைக் குறிவைத்து வெடி குண்டுத் தாக்குதல் நடத்தப் பட்டதில் சம்பந்தப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட ஜாசானி சாம் ரோஸ்னி மற்றும் முகம்மது சைஃபுதின் முஜி ஆகிய இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை கிளந்தானில் ஒரு மலைப் பகுதி யில் கைது செய்யப்பட்டனர். மொவிடா குண்டு வெடிப்பில் சதித் திட்டம் தீட்டியவர்கள் பட்டியலில் அந்த இருவரின் பெயர்களும் இருப்பதாகவும் அவ்விருவரும் போலிசாரால் தேடப்பட்டு வந்தவர்கள் என்றும் காலிட் கூறினர். அவ்விருவரும் கடந்த ஜூலை மாதம் முதல் கோல கிராய் பகுதியில் மறைந்திருந்த தாகக் கூறப்பட்டது.
ஜோகூர் பாருவில் உள்ள ஒரு கேளிக்கை விடுதி மீது தாக்குதல் நடத்த, சிரியாவில் உள்ள ஐஎஸ் குழுவுடன் சேர்ந்து சண்டையிட்டு வரும் மலேசியரான முகம்மது வாண்டி முகம்மது ஜெடியின் உத்தரவுக்காக அவ்விருவரும் காத்திருந்ததாகவும் திரு காலிட் கூறினார்.

