பேங்காக்: தாய்லாந்தில் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாட்களில் பல இடங்களில் அடுத்தடுத்துப் பல குண்டுகள் வெடித்ததற்கு யார் காரணம் என்பது தங்களுக்குத் தெரியும் என்று அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளனர். அந்தக் குண்டு வெடிப்புத் தக்குதல்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்றும் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒருங் கிணைந்த தாக்குதல்கள் அவை என்றும் போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட பல இடங்களில் 11 சிறிய குண்டுகள் வெடித்ததில் நால்வர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். அந்தத் தாக்குதல் களுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.
இந்நிலையில் போலிஸ் படையின் துணைத் தலைவர் போங்ஸ்பாட் போங்சரோன், தனி நபர் ஒருவர் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து ஒரு குழு அந்தத் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறினார். "எங்கள் விசாரணையில் முன்னேற்றம் உள்ளது. அந்தக் குண்டு வெடிப்புத் தாக்குதல் களுக்குக் காரணகர்த்தா யார் என்பது எங்களுக்குத் தெரியும்," என்று போலிஸ் பேச்சாளர் பிங்முவாங் கூறினார். தாக்குதல் களுக்கு உள்ளூர் குழுதான் காரணம் என்று அரசாங்கம் தொடர்ந்து கூறி வருவதை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் அது பற்றி விவரமாகக் கூற அவர் மறுத்துவிட்டார். அந்தக் குண்டு வெடிப்புகள் பயங்கரவாதத் தாக்குதல்கள் அல்ல என்றும் உள்ளூர் குழுவின் நாசவேலை அது என்றும் அவர் கூறினார். இந்நிலையில் ஹுவா ஹின் நகரில் விசாரணைக்காக இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நகோன் சி தம்மராட் மாநிலத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஒருவருக்குக் கைது ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அப்பேச்சாளர் சொன்னார்.
பேங்காக்கில் பல இடங்களில் ராணுவ வீரர்கள் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி

