ஜகார்த்தா: இந்தோனீசியா அதன் 71வது சுதந்திர தினத்தை நேற்று கொண்டாடிய வேளையில் எட்டு இடங்களில் 60க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் படகுகளை மூழ் கடித்ததாக இந்தோனீசிய அதிகாரி ஒருவர் கூறினார் இந்தோனீசிய கடல் பகுதியில் வெளிநாட்டு மீனவர்கள் மீன் பிடிப்பதைத் தடுப்பதற்கான நட வடிக்கைகளை இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ தீவிரப்படுத்தியுள்ளார்.
இந்தோனீசியாவின் கடல்துறை அரசுரிமையை பாதுகாப்பதில் அந்நாடு உறுதியாக இருப்பதை எடுத்துக்காட்டும் வகையில் நேற்றைய சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது பல வெளிநாட்டுப் படகுகள் மூழ் கடிக்கப்பட்டதாக மீன் வளத் துறை அமைச்சின் அதிகாரி மாஸ் அஹமட் சண்டோசா கூறினார். இந்தோனீசிய கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன் பிடித்த வெளிநாட்டுப் படகுகளை இந்தோனீசியா கைப்பற்றி அழித்து வருகிறது. அந்த வரிசையில் இதுவரை பல படகுகளை இந்தோனீசியா மூழ்கடித்துள்ளது. வெளிநாட்டுப் படகுகள் மூழ்கடிக்கப்படுவது தேசிய தொலைக்காட்சியில் ஒளி பரப்பானது.

