ஆஸ்திரேலிய சுற்றுலா நகரங்களை உலுக்கிய நிலநடுக்கம்

ஆஸ்திரேலிய சுற்றுலா நகரங்களை உலுக்கிய நிலநடுக்கம்

1 mins read

சிட்னி: ஆஸ்திரேலியாவின் பிரபல சுற்றுலா நகரங்களை நேற்று 5.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் உலுக்கியதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குவீன்ஸ்லாந்து மாநிலத்திலிருந்து சுமார் 54 கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் 7 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பை கருத்தில்கொண்டு பல கட்டடங்களிலிருந்து பலர் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் உடனடியாகத் தெரியவில்லை. இருப்பினும் கடற்கரைக்கு மிக அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தால் அதன் பாதிப்பு அதிகமாக இருந்திருக்கும் என்று அதிகாரிகள் கூறினர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.