காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகத் திற்குள் துப்பாக்கிக்காரர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் ஏழு மாணவர்கள் உட்பட 13 பேர் பலியானதாக அந்நாட்டுப் போலிசார் கூறினர். தாக்குதலில் ஈடுபட்ட இரு துப்பாக்கிக்காரர்களும் 10 மணி நேரத்திற்குப் பின்னர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டனர். புதன்கிழமை இரவு 7 மணிக்கு தாக்குதல் தொடங் கியதாகக் கூறப்பட்டது. தாக்குதலின்போது பல்கலைக்கழக மாணவர்களும் ஊழியர்களும் உள்ளே சிக்கிக்கொண்டதாக போலிசார் கூறினர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந் தவர்களில் மூன்று போலிசாரும் மூன்று பாதுகாவலர்களும் அடங்குவர். மேலும் ஒன்பது போலிஸ் அதிகாரிகளும் 35 மாணவர்களும் காயமடைந்தனர். சுமார் 750 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக காபூல் போலிஸ் படைத் தலைவர் அப்துல் ரகுமான் ரஹிமி தெரிவித்தார். பல்கலைக் கழகத்தினுள் சிக்கிக்கொண்ட மாணவர்களும் ஊழியர்களும் டுவிட்டர், ஃபேஸ்புக் வழியாகத் தகவல் தெரிவித்து தங்களைக் காப்பாற்றும்படி கெஞ்சிக் கேட்டுக்கொண்டனர்.
பல்கலைக்கழக பேராசிரியர் கள் இருவர் அடையாளம் தெரியாத சிலரால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இரு வாரங்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. அவர்களின் இருப்பிடம், நிலை குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை. காபூலில் உள்ள அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் சுமார் 1,700 மாணவர்கள் பயின்று வரு கின்றனர். அவர்களில் பகுதி நேரமாகப் பயிலும் மாணவர்களும் அடங்குவர்.
தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்கப் பல்கலைக்கழகத்திற்குள் 10 மணி நேரமாக சிக்கியிருந்த மாணவி ஒருவரை காபூல் போலிசார் மீட்டு பாதுகாப்பாக அழைத்துச்செல்கின்றனர். ஏஎப்பி

