மியன்மாரில் புகழ்பெற்ற கோவில்கள் சேதம்

மியன்மாரில் புகழ்பெற்ற கோவில்கள் சேதம்

1 mins read
ddfb0eb1-0403-44dc-9e30-e28784072ebb
-

யங்கூன்: மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இரண்டு சிறுவர் கள் உள்பட மூவர் உயிரிழந்த நிலையில் நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள மிகவும் பழமைவாய்ந்த பல கோவில்கள் சேதம் அடைந்தன. சேதம் அடைந்த கோவில்களைப் பாதுகாக்கவும் அவற்றை சீரமைக்கவும் அரசாங்கம், ராணுவ வீரர்களையும் போலிசாரையும் அங்கு அனுப்பி உள்ளது. புதன்கிழமை ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் பண்டைய நகரமான பகனில் உள்ள பல்வேறு கோவில்களின் கோபுரங்கள் சேதம் அடைந்தன. இந்நகரில் 2,000=லிருந்து 3,000 வரையிலான பகோடாஸ் பெளத்த கோவில்கள் உள்ளன.

சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியதில் குறைந்தது 187 கோவில்கள் சேதம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. 2,500க்கும் மேற்பட்ட புராதன புத்த நினைவுச் சின்னங்கள் அடங்கிய இப் பகுதிக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் வருவதால் எப்போதும் இப்பகுதி பரபரப்பாக காணப்படும். பூமிக்கடியில் 84 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக யங்கூனிலும் பிற நகரங்களிலும் கட்டடங்கள் ஆட்டம் கண்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத் தின் தாக்கம் தாய்லாந்து, இந்தியா, பங்ளாதேஷ் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தில் சேதம் அடைந்த பகன் நகரில் உள்ள புகழ்பெற்ற பகோடா பெளத்த கோவில். படம்: ராய்ட்டர்ஸ்