காடுகளை அழித்து அவற்றை விவசாய நிலங்களாக மாற்றுவதற்காக சட்ட விரோதமாக காடுகளை அழித்து, எரித்ததாகக் கூறி இவ்வாண்டு மட்டும் 463 பேரை இந்தோனீசிய போலிசார் கைது செய்திருப்பதாக அந்நாட்டு போலிஸ் தலைவர் டிட்டோ கர்னாவியன் தெரிவித்துள்ளார். இத்தனை பேர் கைது செய்யப் பட்டதுடன் அரசாங்கம் எடுத்த தடுப்பு முயற்சிகள், சாதகமான காலநிலை காரணமாக காடுகளில், புதர்களில் தீப்பற்றி எரியும் இடங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் குறைந்திருப்பதாகவும் திரு டிட்டோ கூறினார்.
இந்த ஆண்டில் கைதானோர் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட மிக அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார். 2014ல் காட்டுத் தீ ஏற்படக் காரணமாக இருந்ததாகக் கூறி 196 பேரை இந்தோனீசிய போலிஸ் கைது செய்தது. இவ்வாண்டு காடுகளுக்குத் தீ வைத்ததாகக் கூறி 454 சந்தேக நபர்களும் ஒன்பது நிறுவனங்களைச் சேர்ந்த சிலரும் கைது செய்யப்பட்டனர். அந்த ஒன்பது நிறுவனங்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருவதாக தலைமை வேவுத்துறை அதிகாரி அரி டோனோ சுக்மான்டோ தெரிவித்தார்.
சென்ற ஆண்டின் பிற்பாதியில் இந்தோனீசியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் உருவான புகைமூட்டத்தால் மில்லியன்கணக்கான இந்தோனீசியர் களும் அண்டை நாட்டினரும் பாதிக்கப் பட்டனர். இதையடுத்து, சட்டத்திற்குப் புறம்பாக காடுகளை அழித்து எரிக்கும் விவசாயிகள், நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிபர் ஜோக்கோ விடோடோ உத்தரவிட்டார்.2016-08-26 06:00:00 +0800

