அங்காரா: துருக்கியில் சிஸ்ரே நகரில் உள்ள போலிஸ் தலைமை யகத்திற்கு அருகே நேற்று கார்குண்டு வெடித்ததில் 11 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 65 பேர் காயம் அடைந்ததாகவும் போலிசார் கூறினர். அந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்திருப்பதைத் தொலைக்காட்சிப் படங்கள் காட்டின.
சிரியா மற்றும் ஈராக்கின் எல்லையில் உள்ள சிர்னாக் மாநிலத்தில் சிஸ்ரே நகரம் உள்ளது. அந்நகரில் குர்தியர்கள் அதிகமாக வசிக்கின்றனர். குண்டு வெடிப்பு தாக்குதலைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு ஆம்புலன்ஸ் குழுவினர் விரைந்து சென்றனர். காயமுற்றவர்களை மருத்துவமனைகளில் சேர்க்கும் பணியில் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.
அத்தாக்குதலுக்கு பிகேகே என்றழைக்கப்படும் குர்திய பாட்டாளிகள் கட்சியே காரணம் என்று அரசாங்க அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்கும் அந்தக் கட்சிக்கும் இடையேயான சண்டை நிறுத்தப் பேச்சுவார்த்தை கடந்த ஜூலை மாதம் முறிந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் அடிக்கடி தாக்குதல்கள் நடப்ப தாகக் கூறப்படுகிறது.
துருக்கியில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் கிலிக்டாரோகுலுவின் வாகனத்தை குர்தியப் போராளிகள் குறிவைத்துத் தாக்கினர். அதனைத் தொடர்ந்து பாதுகாவலர்கள் அவரைப் பத்திரமாக அழைத்துச் செல்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

