பத்து பகாட்: - இந்த ஆ-ண்டு தொடக்கத்தில் ஜோரிலுள்ள ஒரு கோயில் மற்றும் பல கேளிக்கை மையங்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த தான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவர் மீது நேற்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. முகம்மது சைபுதின் முஜி (வயது 28) மற்றும் ஜசானிஷாம் ரோஸ்னி (வயது 33) இவர்கள் இருவரும் இங்குள்ள பாரிட்ராஜா, தாமான் வாஜாவிலுள்ள ஒரு வீட்டில் ஜூன் 26 ஆம் தேதிக்கும் ஜூலை 2ஆம் தேதிக்கும் இடையே இந்தத் தாக்குதலுக்குத் திட்ட மிட்டதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றவியல் சட்டத்தின் 130-JD பிரிவு மற்றும் 34ஆம் பிரிவு ஆகியவற்றின் கீழ் இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இவர்கள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், 7 ஆண்டுவரை சிறைத் தண்டனை யும் அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இதில் மூன்றாவது நபரான முகம்மது சனுசி சதார் (வயது 31) என்பவர் இந்தச் சதித் திட்டம் தொடர்பான தகவல்களைப் போலி சாருக்குத் தெரிவிக்கவில்லை என்ற அடிப்படையில் அவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
அத்தகைய தகவலைப் போலிசாருக்கு தெரிவிக்காமல் இருந்தது குற்றவியல் சட்டப் பிரிவின் கீழ் குற்றமாகும். இந்தக் குற்றச்சாட்டின் பேரில் இவர் குற்றவாளி என நிரூபணமானால், 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். இவர்களில் முகம்மது சைபுதின் மீது மேலும் இரண்டு குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அரபு எழுத்துக்களைக் கொண்ட கறுப்பு நிற ஐஎஸ் பயங்கர இயக்கத்தின் கொடியை வைத் திருந்ததாகவும் கையெறி குண்டு ஒன்றை வைத்திருந்ததாகவும் அவர் மீது இரண்டு குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

