மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது நேற்று கோலாலம்பூரின் உயர் நீதிமன்றத்திற்கு வருகை அளித்தார். அங்கு மலேசியாவின் எதிர்க்கட்சித் தலைவரான அன்வார் இப்ராகிம் தேசிய பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிராக தொடுத்த வழக்கின் விசாரணையைக் காண்பதற்கு திரு மகாதீர் வந்திருந்தார். அப்போது இரண்டு தலைவர்களும் 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முதலாக நேருக்கு நேர் சந்தித்து உரையாடினர். இயற்கைக்கு மாறான வகையில் ஆணுடன் உறவு வைத் திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு தம்மால் 1998ஆம் ஆண்டில் பதவி நீக்கம் செய்யப்பட்ட மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிமை சந்தித்துப் பேசினார் திரு மகாதீர். சந்திப்பின்போது இருவரும் கை குலுக்கிக் கொண்டனர்.
"1998ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதிக்குப் பிறகு இவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்வது இதுவே முதல் முறை," என பிகேஆர் கட்சியின் தலைவரும் அன் வரின் மனைவியுமான திருமதி வான் அஸிஸா வான் இஸ்மாயில் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மலேசிய உயர்நீதிமன்றத்தில் நடந்த இந்தச் சந்திப்பின்போது பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி, முன் னாள் பத்து காவான் அம்னோவின் துணைத் தலைவர் கைருதின் அபு ஹஸன் ஆகியோர் இருந்தனர். மலேசியாவின் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் அதனை நீக்கக் கோரியும் திரு அன்வார் வழக்குத் தொடுத்துள்ளார். பிரதமருக்கு அதிக அதிகாரத்தைக் கொடுக்கும் இந்தப் புதிய சட்டத்தை மலேசியாவின் எதிர்க்கட்சியும் மனித உரிமை அமைப்புகளும் குறை கூறி வருகின்றன.

