அமெரிக்க அதிபர் ஒபாமா, லாவோஸ் பயணத்தின்போது மீகோங் ஆற்றங்கரை ஓரமாக லுவாங் பிரபாங் எனுமிடத்தில் லாவோஸ் நாட்டுக்கான அமெரிக்கத் தூதர் டேனியல் குலுனி என்பவருடன் இளநீர் அருந்துகிறார். முன்னதாக லாவோசில் நடந்த ஆசியான் மாநாட்டில் உரையாற்றிய திரு ஒபாமா, வியட்னாம் போரின்போது லாவோஸ் நாட்டில் போடப்பட்ட குண்டுகளை அகற்ற அந்நாட்டுக்கு உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
இதில் அமெரிக்காவுக்கு ஆழ்ந்த மனித நேய கடமை உள்ளதாக அவர் கூறினார். வியட்னாம் போருக்குப் பின்னர் இந்த குண்டுகளால் சுமார் 20,000 பேர் உயிரிழந்தனர் அல்லது காயம் அடைந்தனர். லாவோஸ் நாட்டுக்கு வருகை அளித்த முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆவார். லாவோசில் அவர் நேற்று நகர மண்டபத்தில் இளையர்களை சந்தித்துப் பேசினார். அவரது இந்த லாவோஸ் வருகை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

