கோலாலம்பூர் - பேங்காக் அதிவேக ரயில் சேவை

கோலாலம்பூர் - பேங்காக் அதிவேக ரயில் சேவை

1 mins read

பேங்காக்: மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூருக்கும் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கும் இடையே அதிவேக ரயில் சேவையைத் தொடங்குவதன் சாத்தியம் குறித்து ஆராய மலேசியாவும் தாய்லாந்தும் இணக்கம் க-ண்டுள் ளன. அத்தகைய ரயில் சேவையைத் தொடங்குவதற்கான சாத்தியம் குறித்து சம்பந்தப்பட்ட அமைப்புகள் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையைத் தொடங்க மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கும் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சாவும் இணக்கம் கண்டுள்ளனர்.

இரு நாட்டு மக்கள் நன்மை அடையும் வகையில் இரு நகரங்களையும் இணைக்கும் புதிய ரயில் சேவையைத் தொடங்க தாங்கள் விரும்புவதாக திரு நஜிப் கூறினார். திரு நஜிப்பும் தாய்லாந்து பிரதமரும் வெள்ளிக்கிழமை பேங்காக்கில் சந்தித்துப் பேசிய பின்னர் திரு நஜிப் அதிவேக ரயில் சேவை பற்றி அறிவித்தார். இவ்விரு தலைவர்களும் 6வது முறையாக சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு ஆக்ககரமானதாக இருந்தது என்று திரு நஜிப் பின்னர் கூறினார். மலேசிய போக்குவரத்து அமைச்சர் லியோ தியோங் லாய், அனைத்துலக வர்த்தக தொழில் அமைச்சர் முஸ்தபா முகம்மது உள்ளிட்ட 7 அமைச்சர்கள் திரு நஜிப்புடன் தாய்லாந்து சென்றிருந்தனர்.

தாய்லாந்துக்கும் மலேசியாவுக்கும் இடையில் இணைப்பை அதிகரிக்க வேண்டும் என்றால் தாய்லாந்தின் தென் பகுதியில் அமைதியும் நிலைத் தன்மையும் வேண்டும் என்று திரு நஜிப் வலியுறுத்தினார். நிலைத்தன்மை ஏற்பட்டு விட்டால் நாட்டின் பொருளியல் வளர்ச்சி அடையும் என்றும் இரு நாட்டு மக்களும் வளப்ப நிலையை அடைவார்கள் என்றும் திரு நஜிப் கூறியதாக பேங்காக் தகவல்கள் கூறின.