உலகில் 90 விழுக்காட்டினர் அசுத்த காற்றையே சுவாசிக்கின்றனர்

உலகில் 90 விழுக்காட்டினர் அசுத்த காற்றையே சுவாசிக்கின்றனர்

1 mins read

ஜெனிவா: உலகில் 90 விழுக்காட்டினர் அசுத்தமான காற்றையே சுவாசித்து வாழ்வதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. காற்றுமாசினால் ஆண்டுக்கு 6 மில்லியன் பேர் மரணம் அடைவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகவே காற்று தூய்மைக்கேட்டுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகளவில் பல பகுதிகளில் காற்றின் மாசுபாட்டை பரிசோதித்த உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் இதுதொடர்பாக விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அந்த அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை உலக சுகாதார நிறுவனத்தின் சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம்சார்ந்த பிரிவின் தலைவரான மரியா நீரா விளக்கிக் கூறினார். பெரிய நகரங்களில் வாழும் மக்களைவிட, புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் வாழ்பவர்கள்தான் காற்று மாசுபாட்டால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார். சீனா, மலேசியா, வியட்னாம் உள்ளிட்ட நாடுகளும், பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நாடுகளும் காற்று மாசுபாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.