சீனாவில் நிலச்சரிவு: பலரைக் காணவில்லை

சீனாவில் நிலச்சரிவு: பலரைக் காணவில்லை

1 mins read

பெய்ஜிங்: சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த சூறாவளிக் காற்று வீசுகிறது. அத்துடன் அப்பகுதியில் தொடர்ந்து கனமழையும் பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற் பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய பலர் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் இன்னும் 33 பேரைக் காணவில்லை என்று ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. கனமழையிலும் வெள்ளப் பெருக்கிலும் சிக்கி 6 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். நிலச்சரிவு ஏற்பட்டுள்ள கிராமங்களில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கனரக சாதனங்களைப் பயன் படுத்தித் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மீட்புப் பணிகளுக்கு உதவ ஆயிரக்கணக்கான மக்கள் முன்வந்துள்ளதாகக் கூறப்பட்டது. சுகுன் மாநிலத்தில் மட்டும் இதுவரை 13 பேர் காப்பாற்றப் பட்டுள்ளனர். சீனாவைத் தாக்கிய சூறாவளி முன்னதாக தைவானில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மெகி என்றழைக்கப்படும் இந்த சூறாவளி இந்த வாரத் தொடக்கத்தில் தைவானில் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியபோது பலத்த காற்றில் சிக்கி நால்வர் உயிரிழந்தனர். சுமார் 600 பேர் காயம் அடைந்தனர். ஃபிஜியிலும் கனமழை பெய்து வருவதாகக் கூறப்படுகிறது.