அதிகாரிகளிடமிருந்து மீட்ட ஊழல் தொகை 114 மி.ரிங்கிட்

அதிகாரிகளிடமிருந்து மீட்ட ஊழல் தொகை 114 மி.ரிங்கிட்

2 mins read
7fff260a-e4be-43bc-a836-8c791e8f47b4
-

கோத்தாகினபாலு: மலேசியாவில் ஊழல் விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சாபா நீர்வளத் துறை உயர் அதிகாரிகள் இருவரிடமிருந்து மொத்தம் 114 மில்லியன் ரிங்கிட் தொகையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைப்பற்றியுள்ளது. ரொக்கமாகவும் அவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்தும் ஆணையம் கைப்பற்றியுள்ள மொத்தத் தொகை இது. 49 ஆண்டுகால வரலாற்றில் அரசாங்க ஊழியர்கள் சம்பந்தப் பட்ட லஞ்ச/ஊழல் விவகாரம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைப்பற்றியுள்ள மிகப் பெரிய தொகை இது என்று கூறப்பட்டது. ஆணையம் கைப்பற்றியுள்ள 114 மில்லியன் ரிங்கிட் தொகையில் 45 மில்லியன் ரிங்கிட் சாபா நீர்வளத் துறை இயக்குநரிட மிருந்தும் 7.5 மில்லியன் ரிங்கிட் துணை இயக்குநரிடமிருந்தும் மீட்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய துணைத் தலைவர் அஷாம் பகி செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

இவ்விருவரின் வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றில் சோதனைகள் நடத்தப்பட்டதில் ஆடம்பரக் கார்கள், விலை மதிப்புள்ள கைக்கடிகாரங்கள், நகைகள், விலை உயர்ந்த கைப்பைகள் ஆகியவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 127 நிலப்பட்டாக்களும் மீட்கப் பட்டுள்ளன. இவர்களுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகளிலிருந்தும் குறிப்பிட்ட தொகை மீட்கப் பட்டுள்ளதாக ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்தது. ஊழல் விவகாரம் தொடர்பில் அவ்விரு உயர் அதிகாரிகளும் புதன்கிழமை கைது செய்யப் பட்டதாகவும் விசாரணைக்காக அவ்விரு அதிகாரிகளும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தாகவும் திரு அஷாம் கூறினார்.

சாபா அரசாங்க உயர் அதிகாரிகள் இருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 52 மில்லியன் ரிங்கிட் ரொக்கப் பணத்தையும் விலை மதிப்புள்ள நகைகளையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணைத் தலைவர் அஷாம் பகியும் (நடுவில்) அந்த ஆணையத்தின் மற்ற உயர் அதிகாரிகளும் செய்தியாளர்கள் கூட்டத்தில் காண்பித்தனர். படம்: தி ஸ்டார்