சீக்கியர் தாக்கப்பட்டார்; இருவர் மீது குற்றச்சாட்டு

சீக்கியர் தாக்கப்பட்டார்; இருவர் மீது குற்றச்சாட்டு

1 mins read

வா‌ஷிங்டன்: கலிஃபோர்னியாவில் சீக்கியர் ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பில் இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் ஒருவர் கூறினார். கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி ரிச்மண்ட் நகரில் உள்ள ஒரு சாலையில் மான் கல்சா என்ற 41 வயதான சீக்கியர் தாக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர். ஒரு சுத்திகரிப்பு நிலையத்தில் துணை குத்தகையாளர்களாகப் பணி புரிந்த ஐந்து பேர் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும் அவர்கள் சாப்பிடச் செல்லும் போதெல்லாம் அளவுக்கு அதிக மாக மது அருந்தி வந்ததாகவும் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

சம்பவம் நடந்த அன்று அந்த ஐந்து பேரும் ஒரு வாகனத்தில் சென்றதாகவும் அவர்கள் திரு கல்சா ஓட்டி வந்த கார் மீது பீர் போத்தல்களை வீசியதாகவும் அந்த அதிகாரி கூறினார். கார் கண்ணாடிக் கதவை கீழே இறக்கிய கல்சா அவர்களைப் பார்த்து "நீங்கள் ஒன்றை மறந்து வீட்டீர்கள்," என்று கூறியிருக்கிறார். அதனால் சினமடைந்த அந்த ஐவரில் இருவர் கல்சாவின் காருக்கு அருகே ஓடிச்சென்று அவரை முகத்தில் குத்தியதாகவும் ஒரு கத்தியைக் கொண்டு அவரது முடியை 10 அங்குல நீளத்திற்கு வெட்டியதாகவும் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவர் மீது அத்தாக்குதல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.