யங்கூன்: மியன்மார் ஆற்றில் ஒரு படகு மூழ்கியதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்ததாகவும் இன்னும் பலரைக் காணவில்லை என்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மியன்மாரின் வடமேற்கு பகுதியில் உள்ள சின்ட்வின் ஆற்றில் சனிக்கிழமை பயணிகள் படகு ஒன்று பாரம் தாங்காமல் கவிழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். அந்த விபத்தைத் தொடர்ந்து சுமார் 150 பேர் காப்பாற்றப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். மியன்மாரில் அதிகமான சாலை வசதிகள் இல்லாததால் அந்நாட்டின் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றுப் பகுதிகளைக் கடந்துசெல்ல படகு போக்குவரத்தையே பெரும்பாலும் நம்பியுள்ளனர்.
படகோட்டிகள் பணத்துக்கு ஆசைப்பட்டு, அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். மக்களும் எப்படியாவது அக்கரைக்கு போய் சேர்ந்தால் போதும் என்ற அவசரத்தில் இதுபோன்ற ஆபத்தான படகுப் பயணத்தை மேற்கொள்வதால் அங்கு அடிக்கடி இதுபோன்ற படகு விபத்துகள் நிகழ்வதாகக் கூறப்படுகிறது. சென்ற ஆண்டு ராக்கின் மாநிலத்தில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு படகு ஆற்றில் மூழ்கியதில் 64 பேர் உயிரிழந்தனர்.
மியன்மார் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த மீட்புப்பணியாளர்கள். படம்: ஏஎப்பி

