பெய்ஜிங்: ஒரு வாரப் பயணம் மேற்கொண்டு சீனா வந்துள்ள மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் சீனப் பிரதமர் லி கியாங், அதிபர் ஸி ஜின்பிங், உயர் அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்து பலதரப் பட்ட அம்சங்கள் குறித்து பேச்சு நடத்த உள்ளார். திரு நஜிப்பின் இந்த வருகையின்போது பல உடன்பாடு கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முக்கியமான தற்காப்பு உடன்பாடு ஒன்றில் திரு நஜிப் கையெழுத்திடுவார் என்று தெரிகிறது. சீனாவிடமிருந்து கப்பல்களை மலேசியா வாங்கு வதற்கு அந்த உடன்பாடு வழி வகுக்கும்.
தென்சீனக் கடல் விவகாரத்தை சமாளிக்கும் விதம் மற்றும் காணாமற்போன மலேசிய MH370 விமானத்தின் பாகங்களைத் தேடும் பணியில் ஒத்துழைப்பு ஆகியவை குறித்தும் சீனத் தலைவர்களுடன் திரு நஜிப் பேச்சு நடத்தவுள்ளார். நேற்று பெய்ஜிங் வந்து சேர்ந்த திரு நஜிப்பை சீனப் பிரதமர் லி கியாங் வரவேற்றார். திரு நஜிப்பிற்கு நேற்றிரவு அரசாங்க விருந்து உபசரிப்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சீனப் பிரதமர் லி கியாங்கை திரு நஜிப் சந்தித்துப் பேசினார். இந்த வாரத்தில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை அவர் சந்திப்பார்.
சீனா வந்துள்ள மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பெய்ஜிங்கில் மக்கள் மாநாட்டு மண்டபத்திற்கு வெளியில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியின்போது திரு நஜிப், சீனப் பிரதமர் லி கியாங்குடன் சேர்ந்து ராணுவ மரியாதை அணிவகுப்பை பார்வையிடுகிறார். சீனாவுக்கு திரு நஜிப் ஒரு வார கால அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது இந்த வருகையின்போது சீனாவுடன் பல்வேறு உடன்பாடுகளில் அவர் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றுள் தற்காப்பு உடன்பாடு மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

