சாபாவில் திடீர் தேர்தல் ஏப்ரலில் நடத்தப்படலாம்

சாபாவில் திடீர் தேர்தல் ஏப்ரலில் நடத்தப்படலாம்

1 mins read

கோலாலம்பூர்: சாபாவில் ஏப்ரல் மாதத்தில் திடீர் தேர்தல் நடத்தப்படலாம் என்று மலேசியத் தகவல்கள் கூறுகின்றன. தேர்தல் நடத்துவது பற்றிய யோசனையை மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் கூறியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இருப்பினும் சாபாவில் திடீர் தேர்தல் நடத்துவது பற்றிய இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னதாக அந்த மாநிலத்தின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற இடங்களைப் பற்றி முழுமையாக மதிப்பிடுமாறு அதிகாரிகளை திரு நஜிப் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரி கிறது. அதுபற்றிய அறிக்கை அடுத்த மாதம் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாதகமான அறிக்கை வெளி வந்தால் சாபாவில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுவது உறுதியாகிவிடும் என்று தகவல் அறிந்த வட்டாரம் ஒன்று கூறியது. தேர்தலில் போட்டியிடும் விவரம் குறித்து எதிர்க்கட்சிகள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. கடந்த பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி சாபா மாநிலத்தில் 60 சட்டமன்ற இடங்களில் 12 இடங்களையும் 25 நாடாளுமன்ற இடங்களில் மூன்று இடங்களையும் கைப்பற்றியது.