மான்செஸ்டர்: அரியானா கிராண் டின் இசை நிகழ்ச்சியில் தற் கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட போது பலருக்கு ஒன்றும் புரிய வில்லை. இசையை ரசித்துக்கொண் டிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் குழப்பத்துடன் நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். ஒரு சிலர், குண்டுவெடிப்பு சத்தம் இசை நிகழ்ச்சியின் ஓர் அங்கம் என்று கருதினர். பாப் பாடகி அரியானா கிரான்டே இசை நிகழ்ச்சியை முடித்த சில வினாடிகளில் குண்டு வெடித்தது. இசை ரசிகர்களில் ஒருவரான ஸாக் ஹனிஃப், மேடையில் ஒலி பெருக்கி விழுந்துவிட்டதாக எண் ணினார். "அதன் பிறகு பலர் கதறுவதும் அலறுவதும் கேட்டது. எங்களுக்கு ஒரே குழப்பமாக இருந்தது," என்று 'என்பிசி' நியூசுக்கு அளித்த பேட்டியில் ஸாக் கூறினார்.
இவோ டெல்காடோ என்பவர், அரங்கத்தை விட்டு வெளியேறிய போது வெடிச் சத்தத்தை கேட்டார். அதன் பிறகு புகையாக இருப் பதைக் கவனித்த அவர் அந்த இடத்தில் சிலர் தரையில் விழுந்து கிடந்ததைப் பார்த்தார். ஒருவர் ரத்தம் தோய்ந்த முகத்துடன் இருப்பதையும் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். "மக்கள் அலறியடித்துக்கொண்டு அரங்கத்தின் மற்றொரு புறத்தை நோக்கி ஓடினர்," என்றார் இவோ டெல்காடோ. காணொளிக் காட்சிகளில் நீண்ட படிக்கட்டுகளை நோக்கி பலர் ஓடு வதைக் காண முடிந்தது. உள்ளூர் நேரப்படி இரவு 10.33 மணிக்கு குண்டு வெடித்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரங்கத்திலிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியே ஓடி வந்த ரசிகர்களில் சிலர். படம்: ராய்ட்டர்ஸ்

