சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து புறப்பட்ட ஆஸ்திரேலிய விமானம் ஒன்று நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள விமான நிலயத்தில் நேற்று 40 பயணிகளுடன் தரையிறங்கியது. அப்போது, அந்த விமானத்தின் கழிப்பறைக்குச் சென்ற ஒரு பயணி, அங்கு கிடந்த ஒரு கடிதத்தைப் படித்துப் பார்த்துப் பதற்றம் அடைந்தார். விமானம் ஓடுபாதையில் மெதுவாக சென்றுகொண்டிருந்த வேளையில் கழிப்பறையில் இருந்து வெளியே ஓடிவந்த அவர், விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்றும் உடனடியாக, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அனைவரும் தப்பி ஓடுங்கள் என்றும் அவர் கூச்சலிட்டதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து, நகரும் படிக்கட்டை பொருத்துவதற்கு வசதியாக திறந்திருந்த விமானத்தின் கதவு வழியாக பலர் கீழே குதித்து ஓட்டம் பிடித்ததாக தகவல்கள் கூறின. உடனடியாக அந்த விமானத்தின் அருகே விரைந்துவந்த வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தினுள் துல்லியமாக சோதனையிட்டபோது, உள்ளே வெடிபொருள் ஏதும் கண்டுபிடிக்கப்படாததையடுத்து அது புரளி என்று கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை எழுதியவர் என்ற சந்தேகத்தின்பேரில் 30 வயது பயணி ஒருவரைக் கைது செய்திருப்பதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் மீது பின்னர் இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக போலிசார் கூறினர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று தகவல் அறிந்த வட்டாரம் ஒன்று தெரிவித்தது.

