சீனா: விபத்தில் உயிருக்குப் போராடிய பெண் மீது மற்றொரு வாகனம் ஏறியது

சீனா: விபத்தில் உயிருக்குப் போராடிய பெண் மீது மற்றொரு வாகனம் ஏறியது

1 mins read

சீனாவில் நிகழ்ந்த கொடூரச் சம்பவம் ஒன்று சமூக ஊடகங் களில் கடுமையாக விமர்சிக்கப் பட்டு வருகிறது. விபத்தில் பெண் ஒருவர் மாண்ட விதம் குறித்து கருத்து தெரிவித்த பலரும் கருணையற்ற சமூகம் என்று சாடியுள்ளனர். கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி சீனாவின் மத்திய மாநிலமான ஹெனானில் உள்ள ஜுமடியன் என்னும் பகுதியில் விபத்தொன்று நிகழ்ந்தது. கண்காணிப்புக் கருவியில் பதிவான அவ்விபத்து படம் தற்போது காணொளி வடிவில் சமூக ஊடகங்களில் வலம் வரு கிறது. சாலையில் பாதசாரிகளுக்கு அனுமதியில்லாத சிவப்பு விளக்கு எரிந்த நிலையில் பெண் ஒருவர் அந்தச் சாலையைக் கடந்தபோது நடுவில் வாகனம் ஒன்றால் மோதப்பட்டு தூக்கி எறியப்பட்டார்.

பின்னர் பாதசாரிகளுக்கான பச்சை விளக்கு எரிந்தது. அப்போது சாலையைக் கடந்த யாரும் கீழே விழுந்து உயிருக்குப் போராடிய பெண்ணுக்கு உதவ வில்லை. சிவப்பு விளக்கால் நின்றிருந்த வாகனமோட்டிகளும் இறங்கி வந்து உதவவில்லை. மாறாக, அந்தப் பெண்ணின் மீது மற் றொரு வாகனம் ஏறி இறங்கியது. அதனால் அவர் மாண்டார். கடந்த புதன்கிழமை வெளி யான இந்தக் காணொளியை 30 மில்லியன் பேர் கண்டுள்ளனர். 70,000 முறை அது பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. 80,000 பேர் கருத்து தெரிவித் துள்ளனர்.