மணிலா: பிலிப்பீன்சின் தென் பகுதியில் உள்ள மராவி நகருக் குள் ஊடுருவியுள்ள போராளி களுக்கும் பிலிப்பீன்ஸ் ராணுவத் தினருக்கும் இடையே கடந்த இரண்டு வார காலமாக சண்டை நீடிக்கிறது. இந்நிலையில் மவுட்டி குழுவைச் சேர்ந்த போராளிகளுக் கும் அரசாங்கப் படையினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை கடும் சண்டை நடந்தது. அதிகாலை 3.30 மணியளவில் தொடங்கிய மோதல் கிட்டத்தட்ட 16 மணி நேரம் நீடித்ததாகக் கூறப்பட்டது. இந்த சண்டையில் பிலிப்பீன்ஸ் கடற்படை வீரர்கள் குறைந்தது 13 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 40 பேர் காயம் அடைந்ததாகவும் ராணுவத் தரப்பு கூறியது. இதனை ராணுவ உயர் அதிகாரி ஒருவர் நேற்று உறுதிப்படுத்தினார். போராளிகளுக்கும் ராணுவத் தினருக்கும் இடையே நீடிக்கும் சண்டையில் ஒரே நாளில் ராணுவ வீரர்கள் பலர் கொல்லப்பட்டது ராணுவத்திற்கு ஏற்பட்ட மிகப் பெரிய பின்னடைவு என்று கூறப்படுகிறது.
ஐஎஸ் குழுவுடன் தொடர்புடைய மவுட்டி போராளிகள் கையெறி குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக ராணுவம் கூறியது. மராவி நகரில் நீடிக்கும் சண்டையில் மவுட்டி உறுப்பினர் களில் 138 பேரும் பொதுமக்களில் 21 பேரும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சண்டையில் மவுட்டி போராளிகள் குழுவை அமைத்து அதனை வழிநடத்தி வந்த இரு சகோதரர்கள் மராவி சண்டையில் கொல்லப்பட்டதற்கான அறிகுறி கள் தென்படுவதாக நம்பத் தகுந்த தகவல்கள் கிடைத் திருப்பதாக பிலிப்பீன்ஸ் ராணுவம் கூறியது. இத்தகவல் உறுதிப்படுத்தப் படுவதை எதிர்பார்த்து காத்திருப் பதாக ராணுவப் பேச்சாளர் ஒருவர் மராவி நகரில் நடந்த செய்தி யாளர்கள் கூட்டத்தில் தெரி வித்தார். மராவி நகரில் பெரும் பகுதியை ராணுவத்தினர் தங்கள் வசம் கொண்டுவந்தனர்.
பிலிப்பீன்சின் மராவி நகர தெருக்களில் கண்காணிப்பு மற்றும் சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள். அந்நகரில் பல பகுதிகளை ராணுவம் திரும்பக் கைப்பற்றியுள்ள போதிலும் எஞ்சிய பகுதியை மீட்பதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகிறது. ராணுவத்தினரை எதிர்த்து போராளிகள் கடுமையாகச் சண்டையிட்டு வருகின்றனர். பிலிப்பீன்ஸ் ராணுவத்தினருக்கு அமெரிக்க சிறப்புப் படை ஆதரவு அளித்து வருவதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. படம்: ஏஎஃப்பி

