தைவானில் புயல்: பள்ளிகள், அலுவலகங்கள் மூடல், விமானச் சேவைகள் ரத்து

2 mins read
416ba01b-40a8-44fe-8b2e-33c275502a19
-

தைப்பே: தைவானில் பலத்த புயல்காற்று வீசுவதால் பள்ளிக் கூடங்களும் அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். அத்துடன் பல ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள தாகவும் பல விமானச் சேவைகள் தாமதம் அடைந்துள்ளதாகவும் ஒரு சில விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். 'நிசட்' என்றழைக்கப்படும் இந்த வகை புயல் காற்று வெள்ளிக் கிழமை முதல் தைப்பே உட்பட பல பகுதிகளை கடுமையாகத் தாக்கி வருகிறது. தைவானில் கிழக்கு கடலோரப் பகுதிகளிலும் பலத்த புயல் காற்று வீசி வருகிறது. மணிக்கு 210 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசுவதாகக் கூறப்படுகிறது. பலத்த காற்று வீசுவதுடன் சில இடங்களில் கனமழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இப்புயல் தைவானை நெருங்கு வதற்கு முன்பே முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஆற்றுநீர் பெருக்கெடுத்து ஊருக்குள் புக நேர்ந்தால் அதனைத் தடுக்க ஆற்றங் கரை களில் மணல் மூட்டைகள் குவிக்கப்பட்டன. பாதுகாப்பு கருதி பள்ளிக்கூடங்களும் அலு வலகங்களும் மூடப்பட்டன. இப்புயல் காரணமாக விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக தைப்பேயிலிருந்து நேற்று புறப்படவிருந்த அல்லது தைப்பே நகருக்கு வரவிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங் களின் சேவைகள் தாமதம் அடைந்தன. கிழக்கு கடலோரப் பகுதிகளில் ரயில் சேவைகள் நேற்று நிறுத்தப்பட்டன. இந்த வகை புயல் காற்று இந்த ஆண்டு தைவானைத் தாக்குவது இதுவே முதல் தடவை என்ற போதிலும் சென்ற மாதம் இங்கு பெய்த கனமழையால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

அதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக வும் வெள்ளநீரில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் கூறின.

தைவானை பலத்த புயல் காற்று தாக்கும் வேளையில் உள்ளுர் குடியிருப்பாளர் ஒருவர் தொங்கு பாலம் வழியாக நடந்து செல்கிறார். தொடர்ந்து பெய்யும் கனமழைக்கும் வீசும் பலத்த காற்றுக்கும் குடை தாக்குப் பிடிக்குமா என்பது பலரின் கவலை. புயல் காற்றின் பாதிப்பிலிருந்து தப்பிக்க கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. புயல் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. படம்: ஏஎஃப்பி