தோக்கியோ: வடகொரியாவின் செயல்களைத் தடுத்து நிறுத்த சீனாவும் ரஷ்யாவும் கூடுதல் பங்காற்ற வேண்டும் என்று ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே கேட்டுக்கொண்டுள்ளார். வடகொரிய விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் தொலைபேசியில் உரையாடிய திரு அபே பின்னர் செய்தி யாளர்களிடம் பேசினார். வடகொரியாவின் மிரட்டலை சமாளிக்க மாறுபட்ட அணுகுமுறை தேவை என்பதை தாங்கள் இருவரும் ஒப்புக்கொண்டதாக திரு அபே கூறினார். வடகொரியாவுக்கு எதிராக கூடுதலாக கடும் நட வடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
"வடகொரியப் பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண பல முயற்சிகளை நாங்கள் எடுத்து விட்டோம். ஆனால் வடகொரியா எல்லாவற்றையும் புறக்கணித்து விட்டு தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது," என்று திரு அபே கூறினார். வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைகள், அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு மட்டுமல்லாமல் மற்ற நாடுகளுக்கும் ஒரு பயங்கர அச்சுறுத்தல் என்றும் வடகொரியாவின் இந்த அச்சுறுத்தல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் ஜப்பானியப் பிரதமரும் கூறியுள்ளனர்.
இதனால் சீனா மற்றும் ரஷ்யா தொடங்கி அனைத்துலக நாடுகள் வடகொரியாவின் மிரட்டலை கருத்தில்கொண்டு அந்நாட்டுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்று திரு அபே கேட்டுக்கொண்டார். வடகொரியா வெள்ளிக்கிழமை நெடுந் தொலைவு ஏவுகணை சோதனையை மேற் கொண்டது. அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் வரை சென்று தாக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்தது அந்த ஏவுகணை. அந்த சோதனையைத் தொடர்ந்து ஐநா பாதுகாப்பு மன்றக் கூட்டத்தை நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்போவதில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதனால் எந்தப் பலனும் இல்லை என்று ஐநாவுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.

