பேங்காக்: அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதான குற்றச்சாட்டு களிலிருந்து தாய்லாந்தின் முன்னாள் பிரதமர்கள் இருவர் விடுவிக்கப்பட்டுள்ளனர். தாய்லாந்தில் 2008ஆம் ஆண்டு நடந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் அப் போதைய பிரதமர் சோம்சாய் வோங்சவாட் மீதும் துணைப் பிரதமர் சவாலிட் யோங்சாய்யுத் மீதும் மேலும் இரு போலிஸ் அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டப் பட்டிருந்தது. திரு சோம்சாய், தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரவின் நெருங்கிய உறவினர் ஆவார். இந்நிலையில் திரு சோம்சாய், திரு சவாலிட் ஆகிய இருவரையும் பேங்காக்கில் உள்ள உச்ச நீதிமன்றம் குற்றச்சாட்டு களிலிருந்து விடுதலை செய் துள்ளது. ஆர்ப்பாட்டத்தின்போது போலிசார் வீசிய கையெறி குண்டுகளால் அல்லது போலிஸ் ஆயுதங்களால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தீர்மானிக்க முடிய வில்லை என்று நீதிபதி ஒருவர் கூறினார்.
2008ஆம் ஆண்டு நாடாளுமன்றக் கட்டடத்தை சுற்றி வளைத்து முற்றுகையிட்ட ஆர்ப் பாட்டக்காரர்களுக்கு எதிராக படைபலத்தைப் பயன்படுத்த போலிசாருக்கு அதிகாரம் வழங்கி யதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க போலிசார் எடுத்த நடவடிக்கை தொடர்பில் கவனக் குறைவாக இருந்ததான குற்றச் சாட்டுகளை அவ்விருவரும் எதிர் நோக்கினர். ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். இருவர் உயிரிழந்தனர். குற்றச்சாட்டிலிருந்து விடு விக்கப்பட்ட திரு சோம்சாய், நீதிமன்றத்திற்கு தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார். திரு சோம்சாய், திரு சவாலிட் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தால் அவர்கள் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்ட னையை எதிர்நோக்கியிருக்கக் கூடும்.
பேங்காக் நீதிமன்றத்திற்கு வந்திருந்த திரு சோம்சாய் தமது ஆதரவாளர்களைச் சந்தித்தார். படம்: ராய்ட்டர்ஸ்

