சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடை யிலான பெருவிரைவு போக்குவரத்துத் திட்டத் தின் வடிவமைப்பு தொடர்பாக ஜோகூர் சுல்தான் கடுமையான சந்தேகங்களை வெளிப் படுத்தி உள்ளார். மலேசியாவின் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக் குழுமத்திடம் பேசிய சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தர், வளைவாகக் காட்சியளிக்கும் திட்டத்தின் வடிவமைப்பு பற்றியும் இடைப்பகுதியில் எழுப்பப்பட இருக் கும் பாலம் குறித்தும் தமது கருத்துகளைத் தெரிவித்தார். சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் பகுதியையும் ஜோகூர் பாருவின் புக்கிட் சகார் பகுதியையும் இணைக்கும் அந்த ரயில் திட்டத்தைத் தாம் வரவேற்பதாகக் குறிப்பிட்ட அவர், இருப்பினும் வளைவான வடிமைப்பு சாத்தியமற்றது என்றும் நிறுவ இயலாதது என்றும் கூறினார். மேலும் அதற்கு அதிப்படியான செலவு பிடிக்கும் என்றும் சுல்தான் தமது கருத்தை வெளிப் படுத்தி உள்ளார்.
"நீரிணைக்கு நெருக்கமாகவும் நீளவாட்டத் திலும் ஏராளமான வடிவமைப்புகள் உள்ள போதும் வளைவான வடிவமைப்பை நாம் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்-? நடைமுறை சாத்தி யமுள்ள, செலவு குறைந்த வடிவமைப்பையே நான் பரிந்துரை செய்கிறேன்," என்றார் அவர். மேலும் பாலத்தின் உயரம் குறித்தும் அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
"கடல் நீர்மட்டத்தி லிருந்து 30 மீட்டர் உயரத்திற்கு ஏன் பாலத்தை எழுப்ப வேண்டும்? அவ்வளவு உயரத்தில் கட்டினால் நகரத் தோற்றத்திற்கு அது இடை யூறாக இருக்கும். ஏற்படவிருக்கும் அந்த இடையூறுக்கு நிரந்தரத் தீர்வு காணும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு உள்ளோம். எனவே திட்டத்தின் ஒட்டுமொத்த வடிவமைப்பையும் மறுஆய்வு செய்ய வேண்டும்," என்று சுல்தான் தமது சிறப்பு பேட்டியில் கூறியுள்ளார். "புதிய வடிவமைப்பை உருவாக்கினால் அதுபற்றி சம்பந்தப்பட்ட தரப்புகள் என்னுடன் கலந்தாலோசிக்க வேண்டும். மேலும் அது என்னிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். "ஜோகூர் மக்களுக்கு மட்டும் பொருத்த முள்ளதாக அல்லாமல் மலேசியர்களுக்கும் சிங்கப்பூரர்களுக்கும் ஏற்றதாக புதிய வடி வமைப்பு இருக்க வேண்டும்," என்று ஜோகூர் சுல்தான் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளின் பகுதிக்குட்பட்ட ரயில் இணைப்பு வேலைகளை இரு நாடுகளையும் சேர்ந்த தனித்தனிக் குத்தகையாளர்கள் செய்வது தொடர்பாக வெளியான செய்தி குறித்து சுல்தான் இப்ராகிமிடம் கேட்கப்பட்டது. இருதரப்புகளும் கூட்டாகச் சேர்ந்து தனியொரு குத்தகையாளரால் ரயில் திட்டம் நிறைவேற்றப் பட வேண்டும் என்பதே தமது யோசனை என்றார் அவர். இந்தக் கூட்டு முயற்சியின் ஒரு பகுதிக்கு எஸ்எம்ஆர்டி கார்ப் நிறுவனத்தை சிங்கப்பூர் அழைத்திருக்கும் அதேவேளை 'பிரசாரனா மலேசியா' நிறுவனத்தை மலேசியா அழைத்து உள்ளது. இரு நிறுவனங்களும் கூட்டு முயற்சி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

