அணுவாயுத உடன்பாட்டிலிருந்து விலகப்போவதாக ஈரான் மிரட்டல்

அணுவாயுத உடன்பாட்டிலிருந்து விலகப்போவதாக ஈரான் மிரட்டல்

1 mins read

டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தடைகளை விதித்தால் உலக வல்லரசு நாடுகளுடன் 2015ஆம் ஆண்டு செய்துகொண்ட அணுவாயுத பரவல் தடை உடன் பாட்டிலிருந்து ஈரான் விலகக் கூடும் என்று ஈரானிய அதிபர் ஹசான் ரவ்ஹானி எச்சரித் துள்ளார். ஈரானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய திரு ரவ்ஹானி, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை கடுமையாகச் சாடினார். அமெரிக்கா சிறந்த பங்காளி நாடு அல்ல என்பதை திரு டிரம்ப் உலகுக்கு காட்டியிருப்பதாகத் திரு ரவ்ஹானி கூறினார்.

ஈரானுக்கு மட்டுமல்ல தங்களது நட்பு நாடுகளுக்கும் அமெரிக்கா நம்பிக்கைக்குரிய நாடு அல்ல என்பதை டிரம்ப் காட்டியுள்ளார். "பழைய அனுபவத்துக்கே திரும்ப வேண்டும் என அமெரிக்கா நினைத்தால் அதற்கு பல மாதங் களோ, வாரங்களோ தேவைப்படாது. சில நாட்கள், சில மணி நேரங்கள் போதும். நாங்கள் இன்னும் அதிக பலத்துடன் பழைய நிலைக்கு உடனடியாகத் திரும்பிவிடுவோம்," என்று திரு ரவ்ஹானி கூறினார். ஈரான் சில நாட்களுக்கு முன்பு செயற்கைக் கோள்களை எடுத்துச் செல்லும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டது. இது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை முயற்சி என்று அமெரிக்கா தெரிவித்தது.

உடன்பாட்டு அம்சங்களை ஈரான் மீறி விட்டதாகக் குற்றம் சாட்டிய அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக புதிய தடைகளை விதித்தது.