சோல்: அமெரிக்காவும் தென் கொரியாவும் சேர்ந்து மேற் கொள்ளும் ராணுவ கூட்டுப் பயிற்சி இன்று தொடங்குகிறது. இந்நிலையில் அந்தப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரி வித்துள்ள வடகொரியா அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி கடுமையாக எச்சரித்துள்ளது. ஆபத்தான விளைவுகளைப் பற்றி எண்ணிப்பார்க்காமல் செயல்படுவதையே அது காட்டுகிறது என்றும் இத்தகைய சூழல் கொடூரத் தாக்குதலுக்கு வழிவிடும் என்றும் வடகொரியா அறிவித்துள்ளது.
வடகொரிய ராணுவம் அமெரிக்காவின் குவாம் தீவையோ அல்லது ஹவாயி தீவையோ குறிவைத்து எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த முடியும் என்று வடகொரியா அறிவித்திருப்பதாக வடகொரியா வின் அதிகாரத்துவ நாளேடு ஒன்று தெரிவித்தது. அண்மைய வாரங்களாகவே அமெரிக்காவுக்கும் வடகொரியா வுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கையை மதிப்பிட்ட பிறகே குவாம் தீவை நோக்கி தயாராக வைக்கப்பட்டுள்ள நான்கு ஏவுகணைகளைப் பாய்ச்ச வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் உத்தரவிடுவார் என்று அந்நாட்டு ஊடகத் தகவல்கள் கூறின. இந்நிலையில் தென்கொரியாவுடன் சேர்ந்து அமெரிக்கா ராணுவ கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ள விருக்கிறது. இப்பயிற்சிக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த போதிலும் திட்டமிட்டபடி பயிற்சி இன்று தொடங்கும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறி வித்துள்ளார்.

