வாஷிங்டன்: மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கு தேவை ஏற்பட்டால் அமெரிக்க அரசாங்கத்தை முடக்கப்போவ தாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அரிசோனாவில் ஆதரவாளர் கள் முன்னிலையில் உரையாற்றிய திரு டிரம்ப், சுவர் எழுப்பும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்க மெக்சிகோ-அமெரிக்க எல்லையில் நீண்ட சுவர் எழுப்பும் திட்டம் பற்றி திரு டிரம்ப், அமெரிக்காவில் சென்ற ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்தார்.
ஆனால் அவரது திட்டத்திற்கு ஜனநாயகக் கட்சியினர் ஆரம்பத் திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆளும் குடியரசு கட்சிக்குள்ளும் அத்திட்டத்திற்கு எதிர்ப்பு இருந்து வருகிறது. அந்தச் சுவரை எழுப்ப பல பில்லியன் டாலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு ஆகும் செலவில் பாதியை மெக்சிகோ ஏற்க வேண்டும் என்று திரு டிரம்ப் கூறி வருகிறார். ஆனால் சுவர் எழுப்ப தாங்கள் நிதி எதுவும் வழங்க மாட்டோம் என்று மெக்சிகோ அதிபர் திட்ட வட்டமாக அறிவித்துவிட்டார். இந்நிலையில் சுவர் கட்டும் திட்டத்தை கைவிடப்போவ தில்லை என்று திரு டிரம்ப் கூறியுள்ளார். எல்லையில் சுவரை எழுப்ப கட்டுமானப் பணியை தொடங்குவதற்கு 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்குவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று திரு டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.

