கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வந்தாலும் தனது ஆயுத பலத்தை அதிகரித்துக்கொள்ளும் வடகொரியா வின் நடவடிக்கை நின்றபாடில்லை. அந்த வகையில், நேற்றுக் காலை 6 மணிக்குச் சற்று முன்னதாக தலைநகர் பியோங்யாங்கிற்கு அருகில் இருந்து கிழக்கு நோக்கி வடகொரியா பாய்ச்சிய ஏவுகணை ஒன்று ஜப்பானின் வட பகுதியான ஹொக்கைடா தீவின் ஆகாய வெளியைக் கடந்து கடலில் விழுந்தது. அண்மைக்காலமாக வடகொரியா அடிக்கடி ஏவுகணைச் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், ஜப்பானின் வான்பகுதி வழியாக அந் நாட்டின் ஏவுகணை பாய்ச்சப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.
அந்த ஏவுகணை அணுஆயுதத்தைத் தாங்கிச் செல்லும் வல்லமை கொண்ட தாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது என்று பிபிசி செய்தியாளர் தெரிவித்தார். அந்த ஏவுகணையைச் சுட்டு வீழ்த்த ஜப்பான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆயினும், ஹொக்கைடோவில் உள்ள தனது குடிமக்கள் உறுதியான கட்ட டங்களில் அல்லது தரைக்குக் கீழுள்ள தளங்களில் பாதுகாப்பாக இருக்கும்படி ஜப்பான் எச்சரித்துள்ளது.
இதற்கிடையே, வடகொரியாவின் ஏவு கணைச் சோதனை எதிர்பாராத, அதே வேளையில் கடுமையான அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
"எங்கள் நாட்டிற்கு மேலே வடகொரியா ஏவுகணையைப் பாய்ச்சியிருப்பது மூர்க் கத்தனமான, பொறுப்பற்ற செயல். இது, இந்த வட்டாரத்தின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் கடுமையான அச்சுறுத் தலை ஏற்படுத்துவதாக அமைந்துள் ளது," என்று திரு அபே கூறினார். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடனும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுடனும் அபே தொலைபேசி வழியாக ஆலோசித்தார். வடகொரியாவுக்கு மேலும் நெருக்கடி கொடுக்க அம்மூன்று தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
வடகொரியா ஏவுகணையைப் பாய்ச்சியதை அடுத்து தற்காப்பு நடவடிக்கையாக ஏவுகணையைச் செலுத்தும் பிஏசி=3 சாதனத்தை யோக்கோட்டா விமானத் தளத்தில் ஜப்பான் தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறது. படம்: ஏஎஃப்பி

