பிலிப்பீன்ஸ் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க விரும்பும் ஆஸ்திரேலியா

பிலிப்பீன்ஸ் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க விரும்பும் ஆஸ்திரேலியா

1 mins read

சிட்னி: பிலிப்பீன்சில் பயங்கர வாதிகளின் மிரட்டல் அதிகமாக உள்ள பகுதிகளில் ஐஎஸ் பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட உதவும் வகையில் பிலிப்பீன்ஸ் ராணுவத்திற்கு பயிற்சி அளிக்க ஆஸ்திரேலியா முன்வந்துள்ளது. பிலிப்பீன்சின் தென் பகுதியில் உள்ள மராவி நகரில் போராளிகளை எதிர்த்து பிலிப்பீன்ஸ் ராணுவத்தினர் கிட்டத்தட்ட 100 நாட்களாக சண்டையிட்டு வருகின்றனர். மூன்று மாதங்களுக்கு முன்பு அந்நகருக்குள் துப்பாக்கிக்காரர் கள் ஊடுருவியதைத் தொடர்ந்து பிலிப்பீன்ஸ் ராணுவத்தினர் அந்நகரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்,

அந்நகரின் பல பகுதிகள் ராணு வத்தினரின் கட்டுப்பாட்டில் வந்த போதிலும் அந்நகரிலிருந்து போராளிகளை முழுமையாக விரட்டியடிக்க முடியவில்லை. ஒரு சில இடங்களில் சண்டை நீடிக்கும் வேளையில் பிலிப்பீன்ஸ் ராணுவத்திற்கு உதவ ஆஸ்திரேலியா முன் வந்துள்ளது. இதுகுறித்து பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டேயுடன் அண்மையில் பேச்சு நடத்தியதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் தெரிவித்துள்ளார். பயங்கர வாதிகளைத் தோற்கடிக்க ஈராக்கிற்கு ஆலோசனை மற்றும் பயிற்சி அளிப்பதில் ஆதரவு அளித்து வருவது போல பிலிப்பீன்சிற்கும் ஆதரவு அளிக்க ஆஸ்திரேலியா தயாராக இருப்பதாக ஜூலி பிஷப் கூறினார்.