பியோங்யாங்: வடகொரியா ஜப்பானை நோக்கி ஒரு ஏவு கணையைப் பாய்ச்சிய மறுநாள் அடுத்த இலக்கு அமெரிக்காவின் குவாம் தீவுதான் என்று வடகொரியா எச்சரித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வடகொரியா ஹூவாசோங்-12 என்று பெயரிடப்பட்டுள்ள ஏவு கணையைச் செலுத்தி சோதனை செய்த மறுநாள் அந்நாட்டின் தலைவர் கிம் ஜோங் உன், அமெரிக்காவின் குவாம் தீவு மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னேற்பாடாக பசிபிக் பெருங் கடலில் அதிகமான ஏவுகணை சோதனைகளை மேற்கொள்ளுமாறு ராணுவத்தை கேட்டுக்கொண்ட தாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை வடகொரி யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. வடகொரிய ராணுவம் தலைநகர் பியோங்யாங் அருகே உள்ள விமான நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை பாய்ச்சிய ஏவுகணை ஜப்பானின் ஹொக்கைடோ தீவின் வான்பகுதியைக் கடந்து சென்று வடக்குப் பசிபிக் கடலில் விழுந்தது. சுமார் 550 கி.மீ. உயரத்தில் பறந்து சென்ற இந்த ஏவுகணை சுமார் 2,700 கி.மீ. தொலைவு வரை சென்றுள்ளது.
ஜப்பானை நோக்கி வடகொரியா ஏவுகணை பாய்ச்சினால் அதனை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து ஜப்பானியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த பாவனைப் பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் ஒரு கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்டபோது அவர்கள் தங்கள் தலைகள் மீது கைகள் மற்றும் தொப்பிகளை வைத்து மறைத்தபடி தங்களை பாதுகாத்துக் கொள்கின்றனர். படம்: ஏஎஃப்பி

