வாஷிங்டன்: ஜப்பானை நோக்கி வடகொரியா ஏவுகணையைப் பாய்ச்சிய மறுநாள் வடகொரிய விவகாரத்திற்கு அரசதந்திர ரீதியில் தீர்வு காணவே அமெரிக்கா இன்னமும் விரும்புகிறது என்று அமெரிக்க தற்காப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேத்திஸ் கூறியுள்ளார். வடகொரியாவின் ஏவுகணை சோதனையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், "வடகொரியாவின் சினமூட்டும் செயலுக்கு பேச்சு வார்த்தையால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை," என்று டுவிட்டர் பக்கத்தில் தெரிவித் திருந்த நிலையில் திரு மேத்திஸ் இவ்வாறு கூறினார். வடகொரியப் பிரச்சினைக்குத் தீர்வு காண கடந்த 25 ஆண்டுகளாக அந்நாட்டுடன் அமெரிக்கா பேச்சு நடத்தி வருவதாகவும் அதனால் எந்தப் பலனும் ஏற்படவில்லை என்றும் திரு டிரம்ப் கூறினார்.
இந்நிலையில் வடகொரிய மிரட்டலுக்கு அரசதந்திர ரீதியில் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையை அமெரிக்கா இழந்துவிட்டதா என்ற கேள்விக்கு, அந்த முயற்சியை தாங்கள் என்றும் கைவிடப் போவதில்லை என்று திரு மேத்திஸ் கூறினார். தென்கொரிய தற்காப்பு அமைச்சர் சோங் யோங் மூவை தற்காப்பு அமைச்சு அலுவலகத்தில் சந்தித்துப் பேசியபோது திரு மேத்திஸ் இவ்வாறு கூறினார். வடகொரியாவின் மிரட்ட லிலிருந்து அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பானை பாதுகாக்க தாங்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையே அமெரிக்காவை ரஷ்யா எச்சரித்துள்ளது.

