மெல்பர்ன்: காயமடைந்த கங்காரு வைக் கொடூரமான முறையில் கழுத்தை வெட்டிக் கொல்லும் காணொளி சமூக ஊடகங்களில் தீயாகப் பரவியதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வனவிலங் கைக் கொன்றதாக அந்த 43 வயது நபர் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளதாக விக்டோரியா மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது வீட்டிலிருந்து கத்தி களையும் காவல்துறையினர் பறி முதல் செய்துள்ளனர். அருவருக்கத்தக்க சம்பவம் என்று இதனை சுற்றுச்சூழல் அதிகாரிகள் வருணித்துள்ளனர். விக்டோரியா சட்டத்தின் கீழ் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 38,056 டாலர் அபராதமும் விதிக்கப் படலாம்.
சீனத் தகவல் செயலியான 'வீசாட்டில்' பரவலாகப் பகிர்ந்து கொள்ளப்பட்ட காணொளியில் தாழ்வான மலைப் பகுதியில் காயமடைந்துள்ள கங்காருவை ஒருவர் நெருங்கிச் செல்வதைக் காண முடிந்தது. கங்காரு கால்களை உதறி சத்தம் போட்டதால் அந்த நபர் பின்பக்கமாக அதனை நெருங்கு கிறார். பின்னர் கங்காருவின் வால் மீது காலை வைத்து அழுத்திப் பிடித்தவாறு கங்காருவின் கழுத்தை அவர் வெட்டுகிறார். பின்னணியில் சிலர் சிரிக்கும் சத்தமும் கேட்கிறது. சம்பவம் தொடர்பில் பேசிய விக்டோரியா சுற்றுச்சூழல், நிலம், தண்ணீர்த் திட்டத்தின் பேச்சாளர் கிளென் ஷார்ப், விலங்கு வதையைக் கடுமையாகக் கருது கிறோம் என்றார். இந்தச் சம்பவத்தை ஊடகங்கள் வழியாக வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததற்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண் டார்.

