மாஸ்கோ: வடகொரியப் பிரச்சினையில் மிரட்டலைக் கைவிட்டு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணவேண்டும். இல்லையென்றால் அது பெரும் பிரச்சினையாக உருவெடுக்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் எச்சரித்துள்ளார். இவ்வாரம் ஜப்பானை நோக்கி வடகொரியா ஏவுகணையைப் பாய்ச்சியதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக வடகொரியாவுடன் நடத்தி வந்த பேச்சுவார்த்தையில் எந்தப் பலனும் ஏற்படவில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறி யிருக்கும் வேளையில் ரஷ்ய அதி பரின் கருத்து வெளியாகியிருக் கிறது. "இந்தப் பிரச்சினையில் அனைத்துத் தரப்பினரும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது சிறந்தது. அதன் மூலமே தீர்வு காண முடியும்," என்று புட்டின் வலியுறுத்தினார்.
"மிரட்டுவது, அழுத்தம் கொடுப்பது, புண்படுத்துவது, ராணுவப் பலத்தைக் காட்டுவது போன்றவற்றால் எந்தப் பலனும் ஏற்படாது. "வடகொரியாவுக்கு எதிரான இத்தகைய செயல்கள் பயனற்றுப் போய்விடும்," என்று ரஷ்ய அதிபர் குறிப்பிட்டார். வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணைகளைப் பாய்ச்சியதால் கொரிய தீபகற்பத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. கடந்த செவ் வாய்க்கிழமை ஜப்பானை நோக்கி நடுத்தரத் தொலைவு ஏவுகணையை வடகொரியா பாய்ச்சியது. இதையடுத்து வடகொரியா வுக்கு எதிராக அனைத்து வாய்ப்பு களும் பரிசீலிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டியிருந்தார். இதில் வடகொரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையும் உள்ளடங்கும். இந்தச் சூழ்நிலையில் தென் கொரியாவுடன் அமெரிக்காவின் குண்டு வீசும் விமானங்களும் போர் விமானங்களும் வியாழக் கிழமை அன்று போர்ப் பயிற்சியில் ஈடுபட்டன.

