ஃபுளோரிடா: சக்திவாய்ந்த சூறாவளியாக வகைப் படுத்தப்பட்டுள்ள 'இர்மா' எனும் புயல் கரீபியத் தீவுகளையும் அமெரிக்காவின் தென்பகுதி மாநிலங்களையும் கடுமையாகத் தாக்கி வருகிறது. மணிக்கு 220 கி.மீ. வேகத் தில் வீசும் அந்தப் புயல் அடுத்த 48 மணி நேரங்களில் இன்னும் வலுவடையக்கூடும் என்றும் இதனால் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் அமெரிக்க தேசிய புயல் ஆய்வு நிலையம் தெரிவித்தது. அதனால், ஃபுளோரிடா மாநிலத்தில் அவசரநிலை நடப்பில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்புயல் நேற்று போர்ட்டோ ரிக்கோ கிழக்குப் பகுதி தீவுகளை நெருங்கியதால் இங்கும் அவசரநிலை அறிவிக்கப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சுமார் 62,000 பேர் தங்குவதற்கு வசதியாக அவசரகால தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்புக்காக பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டுள்ளன. தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களை வாங்கி சேமித்து வைத்துக்கொள்ள குடியிருப்பாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

