துபாய்: கத்தாருக்கும் அதற்கு அருகிலுள்ள அரபு நாடுகள் சிலவற்றுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்குத் தீர்வு காணும் வகையில் சமசரசம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருப்பதாக பிபிசி நிறுவனம் செய்தி வெளி யிட்டுள்ளது. பயங்கரவாதக் குழுக்களுக்கு கத்தார் ஆதரவு வழங்குகிறது என்ற குற்றச்சாட்டின் அடிப் படையில், கடந்த ஜூன் மாதம் சவூதி அரேபியாவின் தலைமை யிலான பங்காளி நாடுகள் கத்தாரோடு இருந்த உறவைத் துண்டித்துக் கொண்டன. தான் தலையிட்டால் மட்டுமே இந்தப் பிரச்சினையில் சம்பந்தப் பட்ட இரு தரப்புகளும் மிக விரைவாக ஒப்பந்தம் ஒன்றை எட்ட முடியும் என்று நம்புவதாக டிரம்ப் தெரிவித்தார்.
குவைத் அரசர் ஷேக் சபா அல்-கமத் அல்-ஜபார் அல் சபாவோடு நடத்திய கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது அதிபர் டிரம்ப் இவ்வாறு கூறினார். அமெரிக்கா இந்த நெருக் கடிக்குத் தீர்வு கண உதவ முடியும் என்று பெரும் நம்பிக்கை கொண்டிருப்பதாக அந்த நிகழ்வில் பேசிய குவைத் அரசர் தெரிவித்தார். குவைத் கூட்டம் கத்தார் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமா என்பது சந்தேகமே என்று சில நாடுகள் கூறுகின்றன. கத்தார் நாட்டின் மீது விதிக்கப்பட்ட தடைகளை அகற்ற நிபந்தனைகளுடன் கூடிய கோரிக்கைகளை சவூதி அரேபியா, எகிப்து உள்ளிட்ட நான்கு நாடுகள் முன்வைத்தன. அதனை ஏற்க கத்தார் மறுத்து விட்டது.

