பியோங்யாங்: வடகொரியாவின் அணுவாயுதத் திட்டம் முழுமை அடையும் என்று கூறிய அந்நாட்டின் தலைவர் கிம் ஜோங் உன், தமது நாட்டின் அணுவாயுத நோக்கங்களை நிறைவேற்றப் போவதாக சூளுரைத்திருப்பாக வடகொரிய ஊடகத் தகவல்கள் கூறின. அமெரிக்காவுக்கு சமமாக வடகொரியாவின் ராணுவ பலத்தை அதிகரிப்பது தங்கள் நோக்கம் என்று திரு கிம் கூறியதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை பியோங்யாங் கிலிருந்து ஜப்பானை நோக்கி வீசப்பட்ட ஹுவாசோங்-12 ரக ஏவுகணை திட்டமிட்ட தொலைவு வரை சென்றதைத் தொடர்ந்து அந்த சோதனை வெற்றியளித் திருப்பதாக திரு கிம் கூறினார்.
இந்தச் சோதனை வடகொரிய அணுவாயுத பலத்தின் போரிடும் திறன் அதிகரித்திருப்பதை வெளிப்படுத்துகிறது என்று திரு கிம் கூறியதாக அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. வடகொரியாவின் நோக்கம் அமெரிக்காவுக்குச் சமமான ராணுவ பலத்தைப் பெறுவதுதான் என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது. "எங்களின் இறுதி இலட்சியம் அமெரிக்காவுக்கு சமமாக வட கொரிய ராணுவத்தை வலிமை பெறச் செய்வதுதான்," என்று திரு கிம் கூறியதாக செய்தி நிறுவன அறிக்கை தெரிவித்தது. அப்போதுதான் அமெரிக்க ஆட்சியாளர்கள் வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து தைரியமாக பேச மாட் டார்கள் என்றும் திரு கிம் கூறினார்.

