நியூயார்க்: வடகொரியா, ஈரான் போன்ற நாடுகளின் மிரட்டல்களை எதிர்கொள்ள உலக நாடுகள் அவற்றின் பங்கை ஆற்ற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கேட்டுக்கொண்டார். இத்தகைய மிரட்டல்களின் ஆபத்துகளை அனைத்து நாடுகளும் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் மிரட்டல் இருப்பது தெரிந்தும் வெறும் பார்வையாளர்கள் போல எந்த நாடும் இருக்க முடியாது என்றும் திரு டிரம்ப் கூறினார். ஆகவே இத்தகைய மிரட்டல்களை எதிர்கொள்ள உலக நாடுகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும் திரு டிரம்ப் கேட்டுக்கொண்டார்.
நியூயார்க்கில் நேற்று தொடங்கிய ஐநா பொது சபை கூட்டத்தில் முதன் முறையாக உரையாற்றிய திரு டிரம்ப், வடகொரியா, ஈரான் நாடுகளின் மிரட்டல் பற்றி பேசினார். இந்த நாடுகள் உலக நிலைத்தன்மைக்கும் அமைதிக்கும் மிரட்டலாக விளங்குகின்றன என்றும் அமெரிக்க அதிபர் கூறினார். வடகொரியா அதன் அணுவாயுதங்களைக் கைவிட அந்நாட்டுக்கு ஐநா பாதுகாப்பு மன்ற உறுப்பு நாடுகள் நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். வடகொரியாவின் மிரட்டல் உலக நாடுகள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் என்று தாம் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

