லண்டனில் அமிலத் தாக்குதல்: 6 பேர் காயம்

லண்டனில் அமிலத் தாக்குதல்: 6 பேர் காயம்

1 mins read

லண்டன்: லண்டனின் கிழக்குப் பகுதியில் ஒரு கும்பல், அந்த வழியாகச் சென்றவர்கள் மீது ஆபத்தான அமிலம் போன்ற எரிபொருளை ஊற்றித் தாக்கிய தில் 6 பேர் காயம் அடைந்ததாக லண்டன் போலிசார் தெரிவித் துள்ளனர். எனினும் இவை பயங்கரவாதம் தொடர்புடைய தாக்குதல்களாக இருக்காது எனத் தாங்கள் நம்புவதாக காவல் துறையினர் தெரிவித்தனர். அத்தாக்குதல் தொடர்பில் 15 வயது சிறுவனை கைது செய்திருப்பதாக போலிசார் கூறினர். லண்டனில், ஸ்ட்ராட்ஃபோர்டு வட்டாரத்தில் வெவ்வேறு இடங்களில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. இரு கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அவர்களில் சிலர், அந்த வழியாக வந்தவர்கள் மீது அமிலத்தைப் பயன்படுத்தி இத் தகைய தாக்குதல் நடத்தி வருவதாக போலிசாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அப் பகுதிகளுக்கு விரைந்து சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ் வண்டிகளும் விரைந்து சென்றன.

தாக்குதலில் காயம் அடைந்த சிலருக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. யாருக்கும் கடுமையான காயங்கள் இல்லை என்று போலிசார் கூறினர். தாக்குதலில் காயம் அடைந்த ஓர் இளைஞர் முகத்தில் பட்ட திரவத்தைக் கழுவுவதற்காக அருகில் உள்ள உணவகத்திற்குள் ஓடியதைப் பார்த்ததாக அங்கிருந்த ஒருவர் கூறினார். இப்பகுதியில் அடிக்கடி இத்தகைய அமிலத் தாக்குதல்கள் நடந்து வருவதாகக் கூறப்பட்டது. அண்மைய காலமாக பிரிட்டனில் தொடர்ந்து பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்து வருவதால் இந்த அமிலத் தாக்குதல் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.