செலவு மிகுந்த அரிசி மானியத் திட்டத்தில் கவனக்குறைவாக நடந்துகொண்ட குற்றத்திற்காக தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரவுக்கு நேற்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. திருவாட்டி யிங்லக் தற்போது தலைமறைவாக உள்ள நிலையில் இத்தீர்ப்பு வெளிவந்து உள்ளது. உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 25ஆம் தேதி தீர்ப்பை வெளி யிடுவதாக இருந்தது. அதனால், யிங்லக்கின் ஆதரவாளர்கள் அன் றைய தினம் நீதிமன்றத்திற்கு வெளியே பெரிய அளவில் கூடி யிருந்தனர். ஆனால், யிங்லக் நீதிமன்றத் திற்கு வராமல் புறக்கணித்தார். அத்துடன் அவர் எங்கிருக்கிறார் என்ற கேள்வி எழுந்தது.
அந்த மர்மத்தை விலக்கும் வகையில் யிங்லக் துபாய்க்குத் தப்பி ஓடிவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது. யிங்லக்கின் சகோதரருக்கு அங்கு வீடு ஒன்று இருப்பதாகவும் அது கூறியது. நேற்று தீர்ப்பு வாசிக்கப்பட்ட போதும் நீதிமன்றத்துக்கு யிங்லக் வரவில்லை. இதற்கிடையே, யிங்லக்கின் இருப்பிடம் குறித்து தமக்குத் தெரியும் என்றும் தீர்ப்பு வெளி யாகும் வரை அதுகுறித்து எதுவும் தெரிவிக்கப்போவதில்லை என்றும் ராணுவ அரசாங்கத்தின் பிரத மரான பிரயுத் சான்-ஓச்சா நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

