பெட்டாலிங் ஜெயா: ஐஎஸ் பயங்கர வாத அமைப்புடன் தொடர்புடைய கட்டமைப்பு ஒன்றை உருவாக்கு வதற்காக 2014ஆம் ஆண்டு பிலிப்பீன்ஸ் நாட்டுக்கு சென்ற மூன்று மலேசியர்கள் மீண்டும் தாயகம் திரும்பவில்லை என்று மலேசிய உளவுத் துறை கூறி யுள்ளது. அவர்களில் ஒருவரான செலாயாங் நகர மன்றத்தின் முன்னாள் அதிகாரி அபு நூர் என்று அழைக்கப்படும் முகம்மது ஜொரைமி அவாங் ராய்மி கடந்த வாரம் மராவியில் ராணுவத்தினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தி ஸ்டார் தெரிவித்தது.
முகம்மது ஜொரைமி, மலேசியப் பல்கலைக்கழகத்தின் புத்தகக் கடையில் முன்பு வேலைசெய்த அபு அனாஸ் என்ற முகமது நஜிப் ஹுசென், மலேசியப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் டாக்டர் மஹ்முட் அகமட் ஆகிய மூவரும் 2014ஆம் ஆண்டு ஆறு நாட்கள் பயணமாக பிலிப்பீன்ஸில் உள்ள மின்டானோ பகுதிக்கு பயணம் செய்தார்கள். அங்கு பயிற்சி பெறும் மலேசியப் போராளிகளைப் பின்னர் சிரியா வுக்கு அனுப்பி ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்ப்பது அவர்களது நோக்கம். அணுகுண்டு செய்வதில் தேர்ச்சி பெற்ற முகமது நஜிப், 2015ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி பிலிப்பீன்ஸ் போலிசால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
முகம்மது ஜொரைமி அவாங் ராய்மி. படம்: தி ஸ்டார்

