மோனார்க் விமானச்சேவை நிறுத்தம்; 110,000 பயணிகள் தவிப்பு

மோனார்க் விமானச்சேவை நிறுத்தம்; 110,000 பயணிகள் தவிப்பு

1 mins read

லண்டன்: பிரிட்டனின் மோனார்க் விமான நிறுவனம் தங்களின் போக்குவரத்துச் சேவைகளை உடனடியாக நிறுத்துவதாக இங்கிலாந்தின் விமானப் போக்குவரத்து ஆணையம் நேற்று அறிவித்தது. இந்த திடீர் அறிவிப்பால் சுமார் 110,000 பயணிகள் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். மேலும் 300,000 விமானப் பயண முன்பதிவுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. "விமானச் சேவைகள், விடுமுறைச் சேவைகளை ரத்து செய்வதற்காக வருந்துகிறோம்," என்று மோனார்க் விமான நிறுவனம் டுவிட்டர் வழியாகத் தெரிவித்தது. விமானப் போக்குவரத்துத் துறையில் நிலவும் கடுமையான போட்டியினால் ஐரோப்பிய விமான நிறுவனங்கள் அழுத்தத்தைச் சந்திக்க நேரிடுகிறது. 'ஏர் பெர்லின்', 'அலிடாலியா' ஆகிய இரண்டு விமானப்போக்குவரத்து நிறுவனங்கள் இந்த ஆண்டில் நொடித்துப் போயிருப்பதாகப் பதிவுசெய்துள்ளன. தனது வர்த்தகத்தின் ஒரு சிறு பகுதியை விற்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக சென்ற வியாழக்கிழமை மோனார்க் நிறுவனம் தெரிவித்திருந்தது.