போலிஸ் அதிகாரியை தாக்கிய சோமாலிய அகதி மீது கனடாவில் குற்றச்சாட்டு

போலிஸ் அதிகாரியை தாக்கிய சோமாலிய அகதி மீது கனடாவில் குற்றச்சாட்டு

1 mins read

அல்பெர்டா: கனடாவின் அல்பெர்டா மாநிலத்தில் ஐந்து பேரை கொலை செய்ய முயன்றது தொடர்பில் ஒரு சோமாலிய அகதி மீது கனடா போலிஸ் நேற்று குற்றம் சாட்டியது. அல்பெர்டா மாநிலத்தின் தலைநகரமான எட்மண்டனில் நேற்று முன்தினம் வாகனத்தில் வந்த ஒரு நபர் ஒரு போலிஸ் அதிகாரியை கத்தியால் குத்தினார். அதன் பின்னர் அவர் பாதசாரிகள் நான்கு பேர் மீது வாகனத்தை மோதினார். இவ்விரு தாக்கு தல்களும் பயங்கரவாதத் தாக்குதல் என்று கனடா போலிஸ் கூறியது. இத்தாக்குதல்களில் உயிர் சேதம் ஏதும் இல்லை. இச்சம்பவத்தில் பிடிபட்டவரின் அடையாளங்களை கனடா போலிஸ் வெளியிடவில்லை.

இருப்பினும் அந்த சந்தேக நபர் அப்துல்லாகி ஹாசன் சஹரிஃப், 30, என்று கனடிய ஊடகங்கள் தெரிவித்தன. ராய்டர்ஸ் இதை உடனடியாக உறுதி செய்யவில்லை. இச்சம்பவத்தில் பிடிபட்டவர் 2015 ஆம் ஆண்டில் பயங்கரவாத சித்தாந்தங்களை பரப்புவதற்காக விசாரிக்கப்பட்டார் என்றும் அது பயங்கரவாத அச்சுறுத்தல் என்று கருதப்படவில்லை என்றும் கனடா போலிஸ் கூறியது. மேலும் தீவிர விசாரணையில் அவர் மீது குற்றம் சாட்ட போதுமான ஆதாரங்கள் ஏதும் கிடைக்க வில்லை என்றும் குறிப்பிட்டது.