கோலாலம்பூர்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் நெருங்கிய உறவினரான கிம் ஜோங் நாம் கொலை செய்யப்பட்டது குறித்த வழக்கு விசாரணை கோலாலம்பூர் நீதிமன்றத்தில் நேற்று தொடங்கியபோது அக்கொலை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு பெண்களும் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் அவ்விரு பெண்களும், கிம் ஜோங் நாமின் முகத்தில் விஷத்தன்மை வாய்ந்த விஎக்ஸ் ரசாயனத்தைப் பூசியதற்கான தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக அரசாங்க துணை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார். கிம் ஜோங் நாம் கொலை தொடர்பில் இந்தோனீசியாவைச் சேர்ந்த 25 வயது சிட்டி ஆயுஷா மீதும் வியட்னாமைச் சேர்ந்த 29 வயது டோவன் தி ஹுவாங் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவ்விருவர் மீதான குற்றச்சாட்டு அறிக்கை, வியட்னாம் மற்றும் இந்தோனீசிய மொழிகளில் படித்துக் காண்பிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை யின்போது மொத்தம் 153 பேர் சாட்சியமளிக்கவுள்ளதாக நீதி மன்றத் தகவல்கள் கூறுகின்றன.
கொலைக் குற்றம் சாட்டப் பட்டுள்ள வியட்னாமியப் பெண் டோவன் தி ஹுவாங். படங்கள்: ஏஎஃப்பி

