வாஷிங்டன்: ஈரானுடன் அமெரிக்கா செய்துகொண்ட அணுவாயுத பரவல் தடை உடன் பாட்டை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கைவிடக்கூடும் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானுடனான அந்த உடன்பாட்டை ரத்து செய்வது குறித்து திரு டிரம்ப் விரைவில் நாடாளுமன்றத்தில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த உடன்பாடு ரத்து செய்யப்பட்டால் ஈரான் மீது மீண்டும் பொருளியல் தடைகள் விதிப்பது குறித்து பின்னர் அமெரிக்க நாடாளுமன்றம் தீர் மானிக்கும்.
அந்த உடன்பாடு குறித்து திரு டிரம்ப் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் தீர்மானிப்பார் என்று தெரிகிறது. திரு டிரம்ப், சென்ற ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது ஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட உடன்பாட்டிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அந்த உடன்பாடு அமெரிக்க பாதுகாப்பு நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்ற அடிப்படையில் அந்த உடன்பாட்டை திரு டிரம்ப் அங்கீகரிக்க மாட்டார் என்றும் அவர் தனது இந்த முடிவை வரும் வியாழக்கிழமை அறிவிக்க விருப்பதாகவும் அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.

