துபாய்: துபாயின் மதுபானக் கூடத்தில் மற்றொரு ஆடவரை இடுப்பில் தொட்டதற்காக ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 27 வயது ஆடவர் ஜேமி ஹேரன் ஜூலை 15ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். தான் கையில் வைத்திருந்த பானம் கீழே விழயிருந்ததால் அருகில் இருந்த ஆடவர் மேல் அது விழாமலிருக்க அவர் தன் கையை வைத்து மறைத்தார். ஆனால், அரை மணி நேரம் கழித்து போலிசார் அங்கு வந்து அவரை பொது இடத்தில் தகாத முறையில் நடந்ததற்காகவும் மது அருந்தியதற்காகவும் கைது செய்து அல் பர்ஷா சிறையில் அடைத்தனர்.
அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டதால் இன்னும் ஐக்கிய அரபு சிற்றரசிலேதான் அவர் உள்ளார். இதுவரை அவருக்கு $53,600க்கு மேல் செலவுகளும் ஆகியுள்ளது. துபாய்க்குச் செல்லும் சுற்றுப்பயணிகள் எவ்வாறு எளிதில் கைது செய்யப்பட்டும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டும் உள்ளனர் என்பதை இந்த சம்பவம் காட்டுவதாக துபாயில் தடுப்புக் காவலில் வைத்திருப்போருக்காக குறல் கொடுக்கும் அமைப்பு ஒன்றின் தலைமை நிர்வாகி குமாரி ராதா ஸ்டர்லிங் கூறியுள்ளார். அங்கு சட்டமும் ஒழுங்கற்ற முறையில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

