இம்மாதம் 18ஆம் தேதியன்று சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு தொடங்கும்போது பல குறுந்தொலைவு ஏவுகணைகளைப் பாய்ச்ச வடகொரியா தயாராகி வருவதாக தென்கொரிய நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. வடகொரியத் தலைநகர் பியோங்யாங்கிற்குத் தெற்கே உள்ள ஹுவாங்ஜுவிலிருந்து கடலோர நகரமான நாம்போவுக்கு 30 ஏவுகணைகள் கொண்டு செல்லப்பட்டதை தென்கொரிய, அமெரிக்க அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது.
ஒரே நேரத்தில் பல ஏவுகணை களைப் பாய்ச்சுவது வழக்கத்துக்கு மாறானது. ஆனால் இதற்கு முன்பு வடகொரியா அவ்வாறு செய்துள்ளது. 2014ஆம் ஆண்டில் ஒரே வாரத்தில் 71 ஏவுகணைகளை வடகொரியா பாய்ச்சியது. கடந்த சில மாதங்களாக அமெரிக்காவுக்குச் சினமூட்டும் வகையில் வடகொரியா பல ஏவு கணைகளைச் சோதனை செய்து வந்தது. அவை அமெரிக்காவை எட்டக்கூடிய ஏவுகணைகள் என்று அஞ்சப்படுகின்றது. வடகொரியா தனது ஆறாவது அணுவாயுதச் சோதனையையும் அண்மையில் நடத்தியது.

