மொகாடிஷு: சோமாலியாவின் தலைநகர் மொகாடிஷுவில் கடந்த சனிக்கிழமை நடந்த மோசமான குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு அரசாங்கத்தின் பாதுகாப்பு குறைபாடுதான் காரணம் என்று அந்நாட்டு மக்கள் கூறிவருகின்றனர். சோமாலியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் புதிதல்ல என்றாலும் 270 உயிர்களைப் பறித்த இந்தக் குண்டு வெடிப்பு தாக்குதல் அந்நாட்டில் நடந்துள்ள மிக மோசமான தாக்குதலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக அங்கு நடக்கும் தாக்குதல்களுக்கு அல் ஷபாப் இயக்கமே காரணமாக இருந்தாலும் இம்முறை அந்த இயக்கம் இன்னும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் அல் ஷபாப் இயக்கத்திற்குத் தொடர்புடையவர்கள்தான் இத்தகைய செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.
இதற்கிடையில், அந்நாட்டில் பாதுகாப்பு வலுவில்லாமல் இருப்பதால்தான் பயங்கரவாத இயக்கங்கள் தங்களுக்குச் சாதகமாக அதைப் பயன்படுத்தி கொள்கின்றன என்று கூறப்படுகிறது. அரசாங்கத்தின் குறிப்பாக பாதுகாப்பு சேவையின் குறைபாடுகளை இந்தத் தாக்குதல் வெளிப்படுத்தியுள்ளதாகவும் எட்டு மாதங்களுக்கு முன் அதிபராகப் பொறுப்பேற்ற முகமது அப்துல்லாஹி முகமதின் குறைப்பாட்டைக் காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

